தண்ணீரில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்திலுள்ள பாகநத்தம் ஆவுத்திபாளையம் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இளமுருகன்(8) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில் சிறுவன் தனது அக்கா ஓவியாவுடன் விடுமுறை தினத்தை முன்னிட்டு அதே பகுதியில் வசிக்கும் தனது பெரியம்மா மணியின் வீட்டிற்கு சென்றுள்ளான்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு மணி அப்பகுதியில் இருக்கும் 30 அடி ஆழ கிணற்றில் கயிறு கட்டி இளமுருகனுக்கும், ஓவியாவுக்கும் நீச்சல் கற்று கொடுத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கயிறு அறுந்தது. இதனால் இளமுருகன் தண்ணீரில் மூழ்கியதை பார்த்து மணியும், ஓவியாவும் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனின் உடலை மீட்டனர். பின்னர் சிறுவனின் உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்