ஆயுத பூஜை தினத்தையொட்டி நாமக்கலில் 80 டன் குப்பைகள் அகற்றப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளார்கள்.
தமிழக முழுவதும் நேற்று முன்தினம் ஆயுத பூஜை கோலகலமாக கொண்டாடப்பட்டது. இதற்காக நாமக்கல் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருக்கும் லாரி பட்டறைகள், உணவகங்கள், தொழில் நிறுவனத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்கள். இதற்கு முன்னதாக சுத்தம் செய்யப்பட்ட குப்பைகள் தெருக்களின் ஓரத்தில் கொட்டப்பட்டது.
இதையடுத்து பூஜைக்கு பிறகு நிறுவனம் மற்றும் கடைகளில் அலங்கரிக்கப்பட்ட மாயிலை, பூக்கள், வாழைமரம் உள்ளிட்டவற்றை அகற்றி சாலையோரங்களில் கொட்டினார்கள். இந்த நிலையில் நேற்று நாமக்கல் நகர் பகுதியில் குப்பைகளை அகற்றும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டார்கள். இதில் சுமார் 80 டன் குப்பைகள் அகற்றப்பட்டதாக நகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளார்கள்.