ஏடிஸ் கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சல் வருடம் முழுவதும் கண்டறியப்படும் நோய் என்றாலும் மழைக்காலங்களில் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே மழைக்காலத்தில் வீடுகளை சுற்றி மழை நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், டயர்கள் உள்ளிட்ட எந்த பொருள்களிலும் நன்னீர் தேங்காமல் கவனமுடன் இருக்கும்படியும் சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது.
இந்நிலையில் நடப்பு ஆண்டில் ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரைக்கும் 2,915 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 481 பேர் என்றும், செப்டம்பர் மாதம் 572 பேர் என்றும் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. கடந்த ஒருவாரத்தில் 164 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மழைக்காலம் என்பதால் தமிழகத்தில் அடுத்த மூன்று மாதங்களுக்கு டெங்கு காய்ச்சல் அதிகரிக்கும் என்றும், அதனால் பொதுமக்கள் கவனமாக பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது.