பிரித்தானியர்கள் இரவு நேரங்களில் துணி துவைக்கும் இயந்திரங்களை அதிகமாக பயன்படுத்த நேரிட்டால் அது, உண்மையில் நாடு மொத்தம் இருளில் மூழ்கடிக்கும் அபாயத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் எரிவாயு பற்றாக்குறை காரணமாக 3 மணி நேரம் வரையில் குடும்பங்கள் மின்தடையை எதிர்கொள்ள நேரிடும் என கூறப்படுகின்றது. இங்கு எரிவாயு மின் உற்பத்தி நிலையங்கள், எரிவாயு பற்றாக்குறையால் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டால், குறிப்பிட்ட பகுதிகளில் மின் தடைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அவ்வாறான சூழலில் பொதுமக்களுக்கு அவை அறிவிக்கப்படும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த குளிர்காலத்தில் மின்சாரம் அதிகம் தேவைப்படும் வேளையில் தங்கள் மின் உபகரணங்களை பயன்படுத்தாமல் தவிர்க்க ஊக்கத்தொகை வழங்கப்படும் என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, மின்சாரம் அதிகம் தேவைப்படும் வேளைகளில் துணி துவைப்பது, பாத்திரங்களை கழுவும் உபகரணங்களை பயன்படுத்துவது, மின் வாகனங்களுக்கு சார்ஜ் செய்வது உள்ளிட்டவைகளை தவிர்க்கவே கோருகின்றனர். மேலும், அதிக தேவை இல்லாத நேரங்களில் மின் உபகரணங்களை பயன்படுத்த மக்களுக்கு அறிவிப்பு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஊக்கத்தொகை ஒன்றை அளிக்கவும் எரிசக்தி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்த சேவையை நவம்பர் மாதத்திலிருந்து முன்னெடுக்க முடிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த திட்டமானது தோல்வியில் முடிந்தால், மின்சாரத்திற்கான தேவை விநியோகத்தை விட அதிகமாக இருந்தால், வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு ஒரே நேரத்தில் மூன்று மணி நேரம் வரை மின்சாரம் நிறுத்தப்படும் நிலை ஏற்படலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.