தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் இயக்குனர் மணிரத்னம். இவர் தற்போது கல்கியின் புகழ்பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியின் செல்வன்-1 திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டே வருகிறது. உலக அளவில் 3 நாட்களில் ரூ.200 கோடி வசூலித்தது. 7 நாட்களில் ரூ.300 கோடி வசூலை எட்டியதாக அறிவித்தனர்.
இதன் மூலம் ரஜினியின் எந்திரன், கபாலி படங்கள் போல் ரூ.300 கோடி கிளப்பில் பொன்னியின் செல்வன் இணைந்துள்ளது. தமிழகத்தில் மட்டும் ஏழு நாட்களில் ரூ.124 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை தினங்கள் என்பதால் இன்னும் சூடு பிடிக்கும் என்றும் வசூல் ரூ.400 கோடியை தாண்டும் என்றும் கூறப்படுகிறது. இதனையடுத்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மலேசியா உள்ள வெளிநாடுகளிலும் முந்தைய தமிழ் படங்களின் வசூலை பொன்னியின் செல்வன் முறியடித்து சாதனை நிகழ்த்தியுள்ளது. மணிரத்தினம் படங்கள் வரலாற்றில் உலக அளவில் அதிக வசூல் குவித்த பெரிய வெற்றி படமாக பொன்னியின் செல்வன் அமைந்துள்ளது. ஏற்கனவே பொன்னியின் செல்வன் படத்தை ஓடிடி தளத்துக்கு ரூ.125 கோடி விற்று இருப்பதாக கூறப்படுகிறது.