கர்நாடக மாநிலத்திலிருந்து பெங்களூர் வழியாக தமிழகத்துக்கு போதை பொருட்கள் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த போதைப் பொருட்களை தர்மபுரி, சேலம் மற்றும் ஈரோடு, கோயம்புத்தூர் வழியாக கேரளாவுக்கும் கடத்திச் சென்றுள்ளனர். இதன் காரணமாக காவல்துறையினர் காரிமங்கலம் அருகே உள்ள கும்பாரஹள்ளி சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்து மினி டிரக் ஒன்றினை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.
அந்த சோதனையின் போது வாகன ஓட்டி பெண் குரலில் பேசியுள்ளது காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் பிறகு காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் ஆண் வேடம் அணிந்திருந்த ஒரு பெண்மணி தான் வண்டியை ஓட்டி வந்தது தெரிய வந்தது. இந்த பெண்ணின் பெயர் ஈஸ்வரி (37). இவர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் ஓட்டி வந்த மினி டிரக்கில் 900 கிலோ குட்கா இருந்துள்ளது. இந்த குட்காவை பறிமுதல் செய்த காவல்துறையினர் ஈஸ்வரியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஒரு பெண்மணி ஆண் போன்ற வேடம் அணிந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.