மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ பேசும் போது, 1938 இல் ஹிந்தி ஆதிக்கத்தை எதிர்த்து அன்று தந்தை பெரியாரால் மூட்டப்பட்ட பெரும் நெருப்பை, அணையாமல் பாதுகாத்து, பின் நாட்களில் அது மிகப் பெரிய மக்கள் இயக்கமாக மாற்றி, அதில் வெற்றியும் கண்டார் பேரறிஞர் அண்ணா. அவர் முதலமைச்சராக ஆன பின்பு தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழிக் கொள்கையை சட்டம் ஆக்கினார்.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் வழியில் நமது தலைவர் வைகோ அவர்கள் இந்த மொழி உணர்வு குன்றாமல், இன்றளவும் ஹிந்தி ஆதிக்கத்தை எதிர்த்து போராடி வருகின்றார்.1964-65 எதிர்ப்பு மாணவப் போராட்டங்களில் விளங்கியவர் நம் தலைவர். 1978இல் டெல்லியில் மாநிலங்களவையில் முதன் முதலில் அடி எடுத்து வைத்த போது, நம் தலைவருக்கு ஒன்றிய அரசியல் அனுப்பப்பட்ட ஹிந்தி கடிதத்தை சுக்கு நூறாக கிழித்தெறிந்து, அன்றைய பிரதமர் முராஜி தேசாய் முகத்திற்கு நேராக எறிந்தது மட்டுமல்லாமல்,
தமிழனின் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை நாங்கள் ஹிந்தி ஆதிக்கத்தை எதிர்ப்போம் என்று சூளுரைத்தவர்.புதிய கல்வி கொள்கை என்ன சொல்கின்றது ? ஐந்தாம் வகுப்பு வரை தாய் மொழியில் நீங்கள் கல்வியை கற்கலாம். அதை நாங்கள் வரவேற்கிறோம், பாராட்டுகின்றோம். ஆனால் ஆறாம் வகுப்பு முதல் அந்த தாய் மொழியை தவிர்த்து, ஓர் இந்திய மொழியை மாணவர்கள் கண்டிப்பாக கற்க வேண்டும் என்பது தான் சர்ச்சை.
மாணவர்கள் விரும்பினால் ஒரு வெளிநாட்டு மொழியை மூன்றாவது மொழியாக தேர்ந்தெடுக்கலாம், அது என்ன கட்டாயம் ? படிக்கின்ற மாணவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். எது இரண்டாம் மொழி என்று ? அதில் தலையிட அமித்ஷாவிற்கோ, ஆர் எஸ் எஸ், விஎச்.பிக்கோ பஜ்ரந்தல்கோ எந்த உரிமையும் கிடையாது. அவர்களின் மலிவான அரசியலை காட்டுகின்றது இந்த செயல். அவர்கள் சொல்லுகின்றார்கள்… ஆங்கிலம் ஆங்கிலேயர்கள் மொழி, ஆங்கிலம் அன்னியர்களின் மொழி, ஆங்கிலம் அடிமை சின்னத்தின் சாட்சியம், ஆதலால் ஆங்கிலம் இல்லாத ஒரு பாரதத்தை உருவாக்குவோம் என்ற கருத்தினை விதைக்கிறார்கள் போலி தேசியவாதிகளும், தமிழ் துரோகிகளும்..
இன்றைக்கு இணையத்திற்கு சென்று பார்த்தல் இதுபோல பல கருத்துக்களை நீங்கள் பார்க்கலாம். இதற்கு ஒரு படி மேலே நமது உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் என்ன சொல்கிறார் என்றால் ? நாட்டின் முன்னேற்றத்திற்காக நம்முடைய நாட்டின் திறமைசாலிகள் 95 விழுக்காடு எந்த பங்களிப்பு அளிக்க முடியவில்லை என்று… அதற்கு காரணம் ஆங்கிலம். அதற்காக ஆங்கிலத்திற்கு மாற்றாக ஹிந்தியை கொண்டு வர வேண்டும், நாட்டின் முன்னேற்றத்திற்கு ஹிந்தி வேண்டும், நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு ஹிந்தி வேண்டும் என்று பிதற்றுகின்றார் அமித்ஷா அவர்கள்… இதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்பு நமது பேரறிஞர் அண்ணா அவர்கள் தக்க பதிலடி கொடுத்திருக்கின்றார்கள். அண்ணா சொன்னார்… ஹிந்தி பேசினால் தான் முன்னேற்றம் என்றால், ஹிந்தி பேசும் மாநிலங்கள் ஏன் முன்னேறவில்லை. அந்த கருத்து அன்றும் பொருந்தும், இன்றும் பொருந்தும் என தெரிவித்தார்.