காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்டு உயிரிழந்த சிறுவர்களின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தை அடுத்த திருமுருகன் பூண்டியில் இருக்கும் ஸ்ரீ விவேகானந்த சேவாலய ஆதரவற்றோர் காப்பகத்தில் கெட்டுப்போன உணவுகளை சாப்பிட்ட மாதேஷ், பாபு, ஆதிஷ் உள்ளிட்ட மூன்று சிறுவர்கள் உயிரிழந்தார்கள். சிறுவர்களின் உடல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று முன்தினம் அவர்களின் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து திருப்பூர் தெற்கு ரோட்டரி மின் மயானத்தில் சிறுவர்களின் உடல் தகனம் செய்யப்பட்டது. உயிரிழந்த குழந்தைகளின் உறவினர்கள் கதறி கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 2 லட்சம் முதல் அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து திருப்பூர் ஆர்டிஓ பண்டரிநாதன் 2 லட்சத்துக்கான காசோலையை இறந்த சிறுவன் ஆதிஷின் தாயார் பூங்கொடியிடம் வழங்கினார்.