காஷ்மீரில் சுமார் 7 மாதங்களுக்கு பிறகு குழந்தைகள் பள்ளிக்கு மகிழ்ச்சியாக சென்றுள்ளனர்.
காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை அடுத்து அங்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டு சிறையில் வைக்கப்பட்டனர். 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொது மக்கள் வெளியில் நடமாட முடியாத சூழ்நிலை நிலவி வந்தது. இன்டர்நெட் சேவைகள் துண்டிக்கப்பட்டது.
இதுபோன்ற தொடர் நடவடிக்கைகளால் அப்பகுதி மிகவும் பதற்றத்துடன் காணப்பட்டது. இதை முன்னிட்டு குழந்தைகளின் பாதுகாப்பு கருதி பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. பின் பதற்ற சூழ்நிலை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்த போதிலும், பள்ளிகள் திறக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட சமயத்தில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பப் ஐயப்பட்டனர்.
இந்நிலையில் ஓரளவு பிரச்சனை குறைந்துள்ளது என்பதை மனதார ஏற்றுக்கொண்டு சுமார் 7 மாதங்களுக்கு பின் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் முன் வந்ததையடுத்து காஷ்மீர் குழந்தைகள் இன்று பள்ளிக்கு மகிழ்ச்சியாக சென்றுள்ளனர்.