ராஜ ராஜ சோழன் இந்துவா எனும் சர்ச்சை வலுத்து வருகிறது. அதேநேரம் ஆதரவும் ஒருசேர வலுத்து வருகிறது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ள நடிகர் சரத்குமார் மாமன்னன் ராஜராஜ சோழனின் புகழ் பரப்புவோம் உலகறியச் செய்வோம் என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மாமன்னன் ராஜ ராஜசோழன் இந்துவா?, சைவமா?, வைணவமா?, சைவம் இந்துமதமா? என்று சர்ச்சையாக இப்போது சென்றுகொண்டிருக்கிறது. குரங்கில் இருந்து வந்தவன் மனிதன் ஆவார். அதேசமயம் மனிதகுரங்கு எதில் இருந்து வந்தது..? குரங்கு விலங்கு எனில் விலங்கினத்துக்கு மனிதன் என்று பெயரிட்டது யார்..?
மனிதரை குரங்கு என சொல்வோமா (அல்லது) குரங்கு இப்போது மனிதன் என சொல்வோமா? இந்த சர்ச்சைகள் அனைத்தும் நாட்டுக்கு தேவையான ஒன்றா..? மேலும் முதலில் கோழிவந்ததா?, முட்டை வந்ததா? என்று ஆராய்ச்சி மேற்கொண்டு என்ன சாதிக்க போறோம். யார் முதலில் வந்தார்கள்?, எது முதலாவதாக வந்தது? என்பதை வைத்து பின்னால் மாற்றி அமைக்கப்பட்ட பெயரை விடுத்து ஆதி கால பெயரை அழைக்க தீர்மானிப்பது அறிவார்ந்த செயலாக இருக்க முடியுமா? காலத்துக்கு ஏற்றவாறு ஆட்சி அமைப்பு ஒருங்கிணைப்பு வளர்ச்சி என்பது தவிர்க்க முடியாதது ஆகும்.
அவரவர் நம்பிக்கைக்கு ஏற்றவாறு இறைவனை வழிபட்டு மதச் சார்பின்மையுடன் செயல்படும் நாட்டில் தொடர்ந்து சர்ச்சைகள் எழுவது வேதனைக்குரியது ஆகும். நாளைய மனிதன் விண்வெளிக்கு பாதை அமைக்க திட்டமிடும் போது, செவ்வாய் கோள்களில் குடியிருக்க சிந்திக்கும் போது ராஜராஜ சோழன் எந்த மதத்தைச் சார்ந்தவர் என விவாதிக்காமல், உலக அதிசயங்களுள் ஒன்றாக வைத்து போற்றப்படும் மாபெரும் புகழ்மிக்க தஞ்சை பெரிய கோவிலை மக்களுக்கு அர்ப்பணித்த அந்த மாமன்னன் வீரத் தமிழன் ராஜ ராஜ சோழனின் புகழை உலகில் எட்டுத்திக்கும் எடுத்துச்செல்வதில் இந்த ஆர்வம் இருந்தால் சிறப்பாக இருக்கும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.