சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கான்வென்ஷன் சென்டரில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது.அதில் திமுக தலைவராக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், தலைவர் பதவிக்கு யாருமே வேட்பு மனு தாக்கல் செய்யாததால் ஸ்டாலினே மீண்டும் போட்டியின்றி தலைவராக தேர்வாகியுள்ளார்.
பிரம்மாண்ட ஏற்பாடுகளுடன் நடைபெறும் இந்த பொதுக் குழுவில் திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன் மற்றும் பொருளாளராக டி ஆர் பாலு போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.திமுக துணைப் பொதுச் செயலாளராக திமுக எம்.பி. மு.க.கனிமொழி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ். பொன்முடி, ஐ.பெரியசாமி ஆகியோர் தேர்வாகி இருக்கின்றனர். திமுக முதன்மைச் செயலாளராக கே.என்.நேரு மீண்டும் தேர்வாகி இருக்கிறார்.
இந்நிலையில் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தற்போது படுக்கையறை , கழிவறையை தவிர வேறு எங்கும் பிரைவேசி கிடையாது.எல்லோருக்கும் மூன்றாவது கண்ணாக செல்போன் முளைத்து விட்டதால் நாம் பயன்படுத்தக்கூடிய சொற்கள் மிக மிக முக்கியமானதாகும். ஒரு வார்த்தை வெல்லும், ஒரு வார்த்தை சொல்லும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் பதவிக்கு வரவில்லை என்று யாரும் கவலைப்பட வேண்டாம்.பதவிக்கு வந்து விட்டதாக யாரும் எண்ணிவிட வேண்டாம் என்று மறைமுகமாக பதவி பறிக்கப்படும் என்று அமைச்சர்களுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்