சென்னை மாவட்டத்தில் உள்ள ராயபுரம் மாதா கோவில் போலீஸ் குடியிருப்பில் ராஜேஷ்(39) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளாக பழைய வண்ணாரப்பேட்டை, பாரிமுனை, ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் ஹோட்டல்களில் மீதம் இருக்கும் உணவுகளை சேகரித்து ராஜேஷ் இரவு நேரங்களில் சாலையில் சுற்றி தெரியும் தெரு நாய்களுக்கு உணவளித்து வந்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு நேரத்தில் கல்மண்டபம் சாலை தீயணைப்பு துறை அலுவலகம் அருகே சுற்றித்திரிந்த நாய்களுக்கு உணவளித்துவிட்டு ராஜேஷ் சிறிது தூரம் சென்றுள்ளார். அப்போது ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் குடிபோதையில் தெரு நாய்களை கட்டையால் தாக்கியுள்ளனர். அந்த நாய்களின் சத்தம் கேட்டு திரும்பி வந்த ராஜேஷ் வாயில்லா ஜீவனை எதற்கு அடிக்கிறீர்கள் என தட்டி கேட்டுள்ளார்.
அப்போது குடிபோதையில் இருந்த மர்ம நபர்கள் ராஜேஷை சரமாரியாக அடித்து சட்டையை கிழித்ததோடு அவரது தங்க சங்கிலியையும் பறிக்க முயற்சி செய்தனர். ஆனால் ராஜேஷ் தங்க சங்கிலியை கெட்டியாக பிடித்துக் கொண்டதால் ஆறு மர்ம நபர்களும் அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் காயமடைந்த ராஜேஷ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் காமேஷ், திவாகர், நரேஷ் உள்ளிட்ட 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.