நிதி நிறுவன அதிபர் வீட்டில் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழைய கரூர் சாலை ஜி.எஸ் நகரில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகல் நகரில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த மாதம் 27-ஆம் தேதி ரவிச்சந்திரன் தனது குடும்பத்தினருடன் வெளியூருக்கு சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு ரவிச்சந்திரன் அதிர்ச்சடைந்தார்.
இதனையடுத்து உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்து 20 பவுன் தங்க நகை, 40 ஆயிரம் ரூபாய் பணம், வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.