அரியலூரில் உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் மற்றும் ஆதார் அட்டை இல்லாமல் விற்பனை செய்யும் தனியார் உரக் கடைகளின் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் ரமண சரஸ்வதி எச்சரிக்கை விடுத்து இருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரியலூரில் அதிக விலையில் யூரியா விற்பனை செய்வதாக வந்த புகாரை அடுத்து, தனியார் உரக் கடையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு விற்பனையை முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனிடையில் உர விற்பனையாளர்கள் ஆதார் அட்டையுடன் வரும் விவசாயிகளுக்கு மட்டும் உரம் விற்பனை செய்ய வேண்டும். இந்த உத்தரவை மீறும் உரவிற்பனை நிலையங்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மொத்த உர விற்பனையாளர்கள் வெளிமாவட்டங்களுக்கு உரங்களை விற்பனை செய்யக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் உரங்களை வெளிமாவட்டங்களில் இருந்தும் கொள்முதல் செய்யக் கூடாது. அதன்பின் 45 கிலோ யூரியா மூட்டையை ரூபாய்.266-க்கு மட்டுமே விற்பனை செய்யவேண்டும். இணை பொருட்களையோ (அல்லது) வேறு பொருட்களையோ வாங்க விவசாயிகளை வற்புறுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி நிலம் அற்ற நபர்களுக்கு உரவிற்பனை செய்யக்கூடாது எனவும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆட்சியர் ரமண சரஸ்வதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.