ஈரான் நாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் நடத்தும் ஆர்ப்பாட்டம் தீவிரமடைந்து இரண்டு நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
முஸ்லிம் மதத்தின் சட்டங்களை கடுமையாக கடைபிடித்து வரும் ஈரானில் ஹிஜாப் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையில், தெஹ்ரான் நகரத்தில் மாஷா அமினி என்ற இளம் பெண் சரியாக ஹிஜாப் அணியவில்லை என்ற காரணத்தால் அவரை காவல்துறையினர் தாக்கியதில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தை எதிர்த்து நாடு முழுக்க பெண்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்கள் தங்களின் ஹிஜாபை கழற்றி எறிந்து நெருப்பு வைத்து கொளுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். எனவே, இதை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் கடும் தாக்குதல் நடத்தினர். இதில் தற்போது வரை 154 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவ மாணவிகளும் இந்த போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். அவர்களை கட்டுப்படுத்துவதற்காக இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சனந்தஜ் என்ற பகுதியில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூடு தாக்குதலில் வாகனம் ஓட்டி வந்த ஒரு ஓட்டுனர் படுகாயமடைந்து உயிரிழந்தார். மற்றொரு நபர் துப்பாக்கி குண்டு பாய்ந்து பலியானார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.