Categories
உலக செய்திகள்

மலேசிய மன்னரிடம் ராஜினாமா கடிதத்தை அளித்தார் பிரதமர் மகாதீர் மொஹமத்! 

மலேசிய பிரதமர் மகாதீர் மொஹமத் அந்நாட்டு மன்னரிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார்.

2003ம் ஆண்டு அரசியலில் இருந்து  ஓய்வுபெற்றவர் மகாதீர் மொஹமத். உலகின் மிகவும் வயதான பிரதமர் என்று சிறப்பை பெற்றவர்தான் 94 வயது நிரம்பிய மகாதீர் மொஹமத். கடந்த 2018ல் இவர் மீண்டும் மலேசியாவின் பிரதமர் ஆன போது உலகமே இவரை கொண்டாடியது. அந்நாட்டு ஆளும் கட்சியின் ஊழல்களுக்கு இடையில் தான் தேர்தலை சந்தித்து மகாதீர் மொஹமத் வெற்றிபெற்றார். \

மலேசியன் யுனைட்டட் இண்டிஜினியஸ் கட்சியை சேர்ந்த மகாதீர் மொஹமத், அந்நாட்டு இன்னொரு அரசியல் தலைவரான அன்வர் இப்ராஹிம் கட்சியான பீப்பிள் ஜஸ்டிஸ் கட்சியுடன் சேர்ந்து கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தார். ஆனால் இந்த கூட்டணிக்குள் கடந்த சில நாட்களாக பெரிய அளவில் சண்டை நிலவி வந்தது. இதனால் மகாதீர் மொஹமத், அன்வர் இருவரும் மாறி மாறி ஒருவரையொருவர் விமர்சித்து கொண்டனர். 

இந்த நிலையில் அன்வர் கட்சியை சேர்ந்த சிலரும் முன்னாள் ஆளும் கட்சி உறுப்பினர்களுடன் நேற்று ஆலோசனை செய்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்வர் இப்ராஹிம், மகாதீர் மொஹமத் என்னை ஏமாற்றிவிட்டார். அவர் எங்களுக்கு கொடுத்த சத்தியத்தை மீறிவிட்டார். 

ஆட்சிக்கு வந்து சில வருடங்களில் என்னிடம் பொறுப்பை கொடுப்பேன் என்று கூறினார். ஆனால் மகாதீர் மொஹமத் அதை செய்யவில்லை. என் கட்சியை சேர்ந்தவர்களும் என்னை ஏமாற்றிவிட்டனர் என்று  குற்றம் சாட்டினார். இது மலேசியாவில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று திடீர் திருப்பமாக மகாதீர் மொஹமத் பதவி விலகி இருக்கிறார். தனது ராஜினாமா கடிதத்தை மலேசிய மன்னரிடம் கொடுத்துள்ளார். இதனால் மலேசிய அரசியலில் பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |