தவறாகப் பாஸ்ட் டேக் வழியில் வந்தவர்களிடம் இருந்து ரூ.20 கோடி வசூல் செய்யப்பட்டதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தகவல் அளித்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மின்னணு டோல் பிளாசாக்களில் ஃபாஸ்டேக் இல்லாமல் ஃபாஸ்டேக் பாதைகளில் நுழைந்த 18 லட்சம் வாகன ஓட்டுநர்களிடம் இருந்து இதுவரை சுமார் 20 கோடி ரூபாய் வரை அபராதம் வசூலித்துள்ளதாகத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) தெரிவித்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலைத் துறை இந்தியா முழுவதும் வேகமாகப் போக்குவரத்து முறையை அமலாக்கம் செய்யும் விதமாக இருசக்கர வாகனங்களைத் தவிர அனைத்து வாகனங்களும் பாஸ்ட் டேக் முறையைக் கொண்டு வந்தது. கடந்த டிசம்பர் மாதம் நாடு முழுவதும் அனைத்து சுங்க சாவடியிலும் பாஸ்ட் டேக் முறையும், பாஸ்ட் டேக் கொண்ட வாகனங்கள் செல்ல பிரத்தியேக வழித்தடத்தையும் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து நாடு முழுவதும் சுமார் 1.55 கோடி பாஸ்ட் டேக்கள் வாகனங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் தினமும் 40 லட்ச வாகனங்கள் இதைப் பயன்படுத்துகிறது. மேலும் வாகன உரிமையாளர்கள் அனைவரும் பாஸ்ட் டேக் பயன்படுத்துவதை ஊக்கப்படுத்தும் விதமாக தேசிய நெடுஞ்சாலை துறை பிப்., 29ம் தேதி வரை பாஸ்ட் டே கட்டணத்தில் 100 ரூபாய் தள்ளுபடி செய்துள்ளது.
இந்நிலையில் பாஸ்ட் டேக் இல்லாத வாகனங்கள் பாஸ்ட் டேக் வழியில் பயணித்தால் இரட்டிப்புக் கட்டணம் செலுத்த வேண்டும் என அபராதமும் விதிக்கப்பட்டு இருந்தது. அதன்படி பாஸ்ட் டேக் இல்லாத வாகனங்கள் பாஸ்ட் டேக் வழியில் பயணித்த 18 லட்சம் வாகனங்களிடம் இரட்டிப்புக் கட்டணம் வசூலித்துள்ளது. இந்த அபராதத்தின் வாயிலாக மட்டும் தேசிய நெடுஞ்சாலை துறை சுமார் 20 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளதாக அறிவித்துள்ளது.