பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் அரசு எதிர்ப்பு இயக்கத்துக்கு தனது கட்சி தொண்டர்களை தயார்படுத்துவதற்காக நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் பேரணிகளை நடத்தி வருகின்றார். இந்நிலையில் கைபர் பக்துங்வா மாகாணத்தில் உள்ள தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி அளிப்பதற்காக அங்கு சென்றுள்ளார். இங்கு பொதுமக்களை நேரில் பார்த்து நிதியுதவி வழங்கிய பின்னர் இம்ரான்கான் ஹெலிகாப்டரில் இஸ்லாமாபாத்துக்கு புறப்பட்டுள்ளார்.
அந்த ஹெலிகாப்டர் ராவல்பிண்டி நகரில் உள்ள அடியாலா என்கிற கிராமத்துக்கு அருகே பறந்து கொண்டிருந்தபோது ஹெலிகாப்டரில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த விமானி ஹெலிகாப்டரை தொடர்ந்து இயக்கினால் விபத்துக்குள்ளாக நேரிடும் என்பதை உணர்ந்து அங்குள்ள திறந்தவெளி மைதானத்தில் ஹெலிகாப்டரை அவசரமாக தரையிறக்கியுள்ளார். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு இம்ரான்கான் உயிர் பிழைத்துள்ளார்.
இந்த ஹெலிகாப்டரிலிருந்து இறங்கிய இம்ரான்கான் அங்கு நின்று கொண்டிருந்த கிராம மக்களுடன் கலந்துரையாடினார். மேலும் இளைஞர்கள் அவருடன் “செல்பி” புகைப்படம் எடுத்து கொண்டனர். அதன் பின் இம்ரான்கான் காரில் இஸ்லாமாபாத் சென்றடைந்தார். இதற்கு முன்னதாக கடந்த மாதம் 10-ஆம் தேதி கூட்டம் ஒன்றில் பங்கேற்க இஸ்லாமாபாத்திலிருந்து குஜ்ரன்வாலாவுக்கு சிறப்பு விமானத்தில் இம்ரான்கான் சென்றபோது, நடுவானில் விமானத்தில் கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து, விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.