கல்லூரி மாணவரிடம் பணம் மற்றும் செல்போனை பறித்த மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சரவணம்பட்டியில் வசிக்கும் 22 வயதுடைய வாலிபர் தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்த வாலிபர் ஓரின சேர்க்கையாளர்களுக்கு இடையே தொடர்பு ஏற்படுத்தும் ஒரு செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்தார். அதன் மூலம் அவருக்கு வாலிபரின் நட்பு கிடைத்தது. இருவரும் செயலி மூலம் பழகி வந்தனர். இந்நிலையில் அந்த வாலிபர் சின்னவேடம்பட்டி ஜனதா நகரில் காலியாக இருக்கும் மைதானத்திற்கு வந்தால் ஓரின சேர்க்கையில் ஈடுபடலாம் என கல்லூரி மாணவரிடம் கூறியதாக தெரிகிறது.
இதனை நம்பி கல்லூரி மாணவர் அங்கு சென்று வாலிபரை சந்தித்து பேசியுள்ளார். அப்போது திடீரென வந்த மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் வாலிபருடன் இணைந்து கல்லூரி மாணவரை மிரட்டி அவரது வங்கி கணக்கில் இருந்த 36,000 பணத்தை ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் பறித்துக் கொண்டதோடு, செல்போனையும் வாங்கிக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் கல்லூரி மாணவர் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.