இரவு நேரங்களில் நாம் எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடவேண்டும் மற்றும் தவிர்க்கவேண்டும் என்று இந்த குறிப்பில் தெரிந்து கொள்ளுங்கள்..!
பொதுவாக ஒரு பழமொழி உண்டு காலையில் ராஜாவைப் போல் சாப்பிடு, மதியம் சேவகனை போல் சாப்பிடு, இரவில் பிச்சைக்காரனைப் போல் சாப்பிடு என்பதுதான். அதாவது காலையில் எல்லா சத்துக்களும் நிரம்பிய தானியங்கள் பழங்கள், காய்கறிகள் கலந்த உணவை சாப்பிடவேண்டும். மதியம் நிறைய காய்கறிகள் கொஞ்சம் சாதம், இரவில் எளிதில் ஜீரணமாகக்கூடிய எளிமையான உணவை மிகக் குறைவாக சாப்பிட வேண்டும் என்பதே இதன் அர்த்தம்.
இரவில் சாப்பிடக்கூடாத உணவுகள்:
இன்று நிறைய பேர் காலை உணவை சாப்பிடுவதே இல்லை அன்றைய நாளுக்கு வேண்டிய சக்தியை காலை உணவின் மூலமே பெற முடியும். ஆனால் இன்று நிறைய பேர் காலை உணவு விஷயத்தில் அலட்சியம் காட்டுகிறார்கள். அதே சமயத்தில் எல்லாவற்றையும் சேர்த்து கொழுப்பு சத்து நிரம்பிய வறுத்த, பொரித்த உணவுகளான பிரியாணி, ப்ரைட் ரைஸ், பரோட்டா தான் இன்றைக்கு பெரும்பாலானோரின் இரவு உணவு.
எடை அதிகரிப்பதற்கும், நோய் வருவதற்கும் முக்கியக் காரணமே இந்த உணவு முறைதான். இதில் மசாலா உணவுகள் அசிடிட்டியை ஏற்படுத்தும். அசைவம் பரோட்டா உணவுகள் மலச்சிக்கலை ஏற்படுத்தும். உண்மையில் காலையும் மதியமும் சத்தான உணவுகளை உங்கள் உடல் உழைப்பிற்கு ஏற்ப சாப்பிடலாம்.
ஏனென்றால் காலை மற்றும் மதியம் சாப்பிட்ட பிறகு கண்டிப்பாக நீங்கள் வெறுமனே இருப்பதில்லை ஏதேனும் வேலைகள் செய்து கொண்டுதான் இருப்பீர்கள். ஆனால் இரவு வேலை அப்படி இல்லை சாப்பிட்ட உடன் படுக்க செல்வீர்கள். இல்லை என்றால் டிவியில் உட்கார்ந்து விடுவீர்கள்.
எனவே இரவு நேரத்தில் சத்தான கலோரிகள் சேர்ந்த குறைவான உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம். முக்கியமாக எண்ணெய் உணவுகள் மற்றும் கொழுப்பு அதிகமான உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். குறிப்பாக இரவு உணவுகளில் கவனம் செலுத்தாவிட்டால் செரிமான பிரச்சனைக்கு ஆளாகி இரவு தூக்கத்தை தொலைக்க நேரிடும்.
அதுமட்டுமில்லை உடல் எடையும் அதிகரித்து பல ஆபத்தை உண்டாக்கும். சிலருக்கு காரமான உணவுகளின் மீது பிரியம் அதிகமாக இருக்கும். ஆனால் இப்படி காரமான உணவுப் பொருட்களை இரவு நேரத்தில் சாப்பிட்டால் அது நெஞ்செரிச்சலை தூண்டிவிட்டு தூக்கமின்மைக்கு வழிவகுத்துவிடும்.
குறிப்பாக காரமான உணவுகளில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரித்து உடலில் வெப்ப நிலையை தூண்டிவிட்டு தூக்கத்திற்கு உலை வைத்துவிடும்.
இரவில் சாப்பிடக்கூடிய உணவுகள்:
இரண்டு விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும், ஒன்று சாப்பிடும் உணவு செரிமானப் பிரச்சினைகளை உண்டாகக் கூடாது. உடல் எடையை அதிகரிக்கவும் கூடாது. அந்தவகையில் உப்புமா, இட்லி, இடியாப்பம், தோசை, சாலட் என வயிற்றுக்கு பங்கம் விளைவிக்காத மிதமான உணவை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.
கூடவே பருப்பு சாம்பார், கொத்தமல்லி ,தேங்காய், புதினாவும் சேர்த்து போன்ற சட்னி வகைகளை முடிந்த அளவு சாப்பிடும் பொழுது நல்ல ஜீரண சக்தியும் கிடைக்கும்.
நான் அதிக எடை உள்ளேன் என் எடையை குறைக்க வேண்டும் என்பவர்கள் இரவு நேரத்தில் இரண்டு அல்லது மூன்று வேக வைத்த முட்டைகள் வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிட்டு விட்டு தூங்கலாம். வயிறு நிறைய விட்டாலும் உடலுக்கு தேவையான சத்துகள் மொத்தமும் இதில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழங்கள் மட்டும் சாப்பிட்டு வந்தால் போதும், உங்கள் உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காண முடியும். இதிலும் உங்களுக்கு தேவையான கலோரிகள் இந்த வாழை பழங்களிலேயே கிடைத்துவிடும்.
மாவுச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள் சாப்பிடுவதைத் தவிர்த்துவிட்டு புரோட்டின் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். பொதுவாக இரவு நேரத்தில் முழு சாப்பாடு அதிகப்படியான உணவுகளை தவிர்க்க வேண்டியது அவசியம்.
இது உங்கள் உடல் எடையை மிக விரைவாக அதிகரிக்க தூண்டும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். முக்கியமாக இரவு 7,8 மணிக்குள் சாப்பிட்டுவிட வேண்டும். இப்படி உங்கள் இரவு உணவில் கவனம் செலுத்தினால் உங்கள் உடல் எடையும் சீராக இருக்கும். உடலும் நோயின்றி ஆரோக்கியமாக இருக்கும்.
பொதுவாக நீங்கள் விரும்பும் மற்ற உணவுகளை மாதத்தில் என்றாவது ஒருநாள் வைத்துக்கொள்ளுங்கள் தொடர்ந்து சாப்பிடுவதை தவிர்த்துவிடுங்கள்.