கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குருசடி விளாகம் பகுதியில் கூலி தொழிலாளியான கிப்சன்(35) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மேரி ஷைனி(32) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கிப்சனின் தாய் டெல்பி(65) என்பவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் டெல்பி தனது மருமகளுடன் மார்த்தாண்டம் செல்லும் பேருந்தில் ஏறியுள்ளார். ஒரே இருக்கையில் மாமியாரும் மருமகளும் அடுத்தடுத்து அமர்ந்திருந்தனர். இந்நிலையில் பேருந்து வெட்டுமணி நிறுத்தத்தில் நிற்க முயன்ற போது பின் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் டெல்பியின் கழுத்தில் கிடந்த 2 1/2 பவுன் தங்க சங்கிலியை பறித்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மேரி தப்பியோடிய அந்த பெண்ணை துரத்தி சென்று மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார். இதனை அடுத்து போலீசார் நடத்தி விசாரணையில் நகையை பறித்த பெண் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பவானி(39) என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பவானியை கைது செய்து அவரிடமிருந்து தங்க நகையை மீட்டனர். துணிச்சலாக செயல்பட்டு மாமியாரின் தங்க சங்கிலியை பறித்த பெண்ணை மருமகள் மடக்கி பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.