திமுகவுக்கு முதுகெலும்பு ஒரு குடும்பம் தான் என ஆடிட்டர் குருமூர்த்தி கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள சேத்துப்பட்டு பகுதியில் நேற்று ஸ்கேக்ஸ் இன் தி கங்கா என்ற புத்தக வெளியிடு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஆடிட்டர் குருமூர்த்தி கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொதுக்குழுவில் பேசியதை பார்க்கும் பொழுது அவருக்கு உதவி செய்ய யாரும் இல்லை என்பதை உணர முடிகிறது. இந்நிலையில் அவர்கள் கட்சியில் யாரும் சரியாக இல்லை என்பது அவருக்கே தெரிகிறது. மேலும் 2 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு சனாதன தர்மம் இருந்தது.
அதற்கு சரியான பெயர் இல்லை. ஆனாலும் அது ஒரு மதமாக இருந்துள்ளது. இந்நிலையில் வெளியில் இருந்தவர்கள் தான் இதற்குப் பெயர் கொடுத்தனர். இதனையடுத்து பாஜக ஹிந்துத்துவ அமைப்புகளை வலிமைப்படுத்தும். இதனால்தான் ஸ்டாலின் கவலைப்பட்டுள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு அதிமுகவினர் ஆலோசனை கேட்டபோது ஆலோசனை வழங்கினேன். இரு அணிகளும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நான் அப்போது சொன்னேன்.
ஆனால் என்னிடம் ஆலோசனை கேட்பவருக்கு மட்டுமே ஆலோசனை சொல்வதை கடந்த 50 ஆண்டுகளாக வழக்கமாகக் கொண்டிருந்தேன். மேலும் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர்தான் அதிமுகவுக்கு முதுகெலும்பு, அதேபோல் திமுகவுக்கு ஒரு குடும்பம் தான் முதுகெலும்பாக உள்ளது. ஏனென்றால் அது குடும்ப கட்சி, குடும்ப ஆட்சி எவ்வளவு நாள் ஒற்றுமையாக இருக்கும் என்று சொல்ல முடியாது. இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே அதிமுகவின் முகமாக இருந்தால் அது சிறிய கட்சியாக மாறிவிடும். மேலும் திமுகவுக்கு எதிராக மாற்று சக்தியை உருவாக்க மக்கள் முயற்சிப்பார்கள். அது பாஜகவுக்கு சாதகமாக மாறும் என அவர் கூறினார்.