தலைநகர் சென்னையில் அதிகரித்துவரும் இட நெருக்கடியை போக்கும் வகையில் புது உள் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திதர வேண்டி இருக்கிறது. அந்த அடிப்படையில் கிளாம்பாக்கம் புற நகர் பேருந்து நிலையத்தின் வரவை சென்ற 3 வருடங்களாகவே சென்னை வாசிகள் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். தொல் பொருள் ஆய்வு நிறுவனத்தின் கட்டுப்பாடுகள், நிலம் கையகப்படுத்துதல், கொரோனா தொற்று என பல காரணங்களால் பணிகள் தள்ளிப்போனது. நடப்பு ஆண்டு துவக்கத்திலிருந்தே அந்த பேருந்து நிலையத்தின் பணிகளானது வேகமெடுத்தது. நடப்பு ஆண்டு செப்டம்பரில் பயன்பாட்டுக்கு வரும் என கூறப்பட்டது. இதையடுத்து தீபாவளிக்கு பயன்பாட்டுக்கு வருமென்று கூறினர். பின் டிசம்பர் மாதத்தில் திறப்புவிழா நடக்கும் என தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அடுத்த வருடம்தான் பணிகள் நிறைவடையும் என கூறப்படுகிறது.
இத்தகவல் சென்னை வாசிகளை பெரிதும் ஏமாற்றத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இப்போது பேருந்து நிலையத்தின் உட்புற கட்டுமானங்கள் மட்டும் தொடர்ந்து நடந்து வருகிறது. பேருந்து நிலையத்திற்கு உள்ளேயும், வெளியேயும் போகும் விதமாக மேம்பால வசதிகள், மெட்ரோ ரயில் இணைப்பு பணிகள் போன்றவை இன்னும் தொடங்கப்படவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகவே ஒட்டு மொத்த வசதிகளும் பயன்பாட்டுக்கு வந்தால்தான் பொதுமக்களுக்கு அது பல வகைகளில் உதவிகரமாக இருக்கும். சென்னையிலிருந்து வெளியூர் செல்வதற்கான பயணமும் எளிமையாகும் என்று கூறுகின்றனர். அந்த பேருந்துநிலையம் சுமார் ரூ.400 கோடி மதிப்பீட்டில் 88.52 ஏக்கரில் அமைக்கப்பட்டு வருகிறது. இவற்றில் அரசு பேருந்துகளுக்கு 130 நிறுத்தமும், ஆம்னி பேருந்துகளுக்கு 85 நிறுத்தமும் வர இருக்கிறது. இது தவிர்த்து 300 கூடுதல் பேருந்துகள் நிறுத்திவைக்கும் அளவுக்கு வசதிகள் செய்யப்பட இருக்கிறது.
பார்க்கிங் வசதிகளை பொறுத்தவரையிலும் 1.99 ஏக்கரில் 275 கார்கள், 3,582 இருசக்கர வாகனங்கள் நிறுத்திவைக்கும் அளவிற்கு கட்டப்பட இருக்கிறது. அதுமட்டுமின்றி தாய்மார்கள் அறை, மருத்துவமையம், ஸ்டோர் ரூம், உடைமைகள் வைக்கும் அறை, ஏடிஎம், கழிவறைகள், சிசிடிவி அறைகள், மின்சார அறைகள், கட்டுப்பாட்டு அறைகள், டிக்கெட் கவுண்டர்கள், போக்குவரத்துகழக அலுவலகங்கள், நேரக் கண்காணிப்பு அறைகள், உணவகங்கள், வர்த்தககடைகள், தீயணைப்பு நிலையம் ஆகியவையும் இடம்பெற இருக்கிறது. சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தை பொறுத்தவரையிலும் நீலநிற வழித்தடத்தை விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் வரை நீட்டிக்க முடிவுசெய்துள்ளது. இதேபோன்று சிப்காட் வரையிலான பர்பிள் வழித் தடத்தையும் கிளாம்பாக்கம் உடன் இணைக்கும் விதமாக திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இவை எப்போது துவங்கப்படும்? (அல்லது) முடிக்கப்படும்? என்பதுதான் கேள்விக்குறியாக இருப்பதாக சமூகஆர்வலர்கள் கூறுகின்றனர்.