விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள சின்னகாமன் பட்டி கிராமத்தில் ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சின்னகாமன்பட்டியில் பிரபாகரன் என்பவருக்கு சொந்தமான சூரியபிரபா பட்டாசு தொழிற்சாலை உள்ளது. இந்த பட்டாசு தொழிற்சாலையில் கடந்த 19ம் தேதி காலை வழக்கம்போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு வாகனத்தில் பட்டாசு ஏற்றும்போது உராய்வின் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த வெடி விபத்தில் பட்டாசு தொழிற்சாலையில் உள்ள அனைத்து அறைகளிலும் தீ மளமளவென பரவி பட்டாசுகள் வெடித்து சிதறியது. தகவலறிந்து வந்த விரைந்து வந்த சாத்தூர் வெம்பக்கோட்டை தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணி மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விபத்தில் 3 பட்டாசு தயாரிக்கும் அறைகள் தரைமட்டமானது. இந்த வெடிவிபத்தில் பட்டாசு தொழிற்சாலையில் பணியில் இருந்த வள்ளியம்மாள், விஜயகுமார் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 5 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த விபத்தில் பலியான கார்த்திக் குழந்தைத் தொழிலாளி என்பதால் அவரை வேலைக்கு அமர்த்திய குற்றத்திற்காக குழந்தைத் தொழிலாளர் தடுப்புச் சட்டத்தின் கீழும் பட்டாசு ஆலை நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட உள்ளதும் குறிப்பிடத்தக்கது.