நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மஞ்சனக்கொரை குந்தாஹவுஸ் பகுதியில் குமரேசன்-பத்மினி தம்பதியினருக்கு சொந்தமான இடம் உள்ளது. அங்கு வீடு கட்ட தம்பதி முடிவு செய்தனர். இதற்கான பணி அர்ஷத் என்ற ஒப்பந்ததாரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த ஒரு மாதமாக வீடு கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தனர். இந்நிலையில் வீட்டின் அருகே தடுப்புசுவர் கட்டுவதற்காக 5 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டும் பணி நேற்று நடைபெற்றுள்ளது. இதில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வேலு(28), சேட்டு(54) உள்பட நான்கு தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மதியம் 12 மணியளவில் பள்ளம் தோண்டும் பணி நிறைவடையும் நிலையில் திடீரென அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த மண் சரிந்து விழுந்ததால் வேலு, சேட்டு ஆகிய இரண்டு பேரும் உயிரோடு நிலத்தில் புதைந்தனர். இதனை பார்த்த அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் இருவரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வேலு, சேட்டு ஆகிருவரையும் மீட்டபோது அவர்கள் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.