கரூர் மாவட்டத்தில் உள்ள தரகம்பட்டியில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. கடவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 20-க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளில் 100 நாள் வேலை வழங்கவில்லை. இதை கண்டித்து தான் விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் பாலபாரதி தலைமை தாங்கினார். இந்தப் போராட்டத்தின் போது மத்திய, மாநில அரசுகளேவிவசாயிகளின் வயிற்றில் அடிக்காமல் 100 நாள் வேலை திட்டத்தை உடனடியாக வழங்குங்கள் என்று கோஷமிட்டனர். இதைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் பாலபாரதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அவர் பேசியதாவது, 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 100 நாள் வேலை திட்டத்தை வழங்கவில்லை. சில பகுதிகளில் 5 அல்லது 10 நாள் மட்டுமே வேலை கொடுக்கின்றனர். அதோடு அரசு நிர்ணயத்தை 282 ரூபாய் சம்பளத்தை வழங்காமல், 210 ரூபாய் மட்டுமே வழங்குகின்றனர். எனவே 100 நாள் வேலை திட்டத்தை உடனடியாக வழங்குங்கள். இதற்கு மறுப்பு தெரிவிக்கும் பட்சத்தில் மத்திய அலுவலகம் மற்றும் பாஜக அலுவலகம் முற்றுகை இடப்படும். எனவே தமிழகத்தில் உள்ளாட்சித் துறை உடனடியாக இந்த பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். மேலும் திமுக தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தது போன்ற 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாளாக உடனடியாக உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.