இந்தியாவில் அதிகளவு எண்ணிக்கையிலான ஆண்ட்ராய்டு ட்ரோஜன் கண்டறியப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. இப்போது வெளியாகி இருக்கும் ஒரு புது அறிக்கையின் அடிப்படையில், 3ம் தரப்பு அதிகாரப்பூர்வமற்ற வெர்ஷனான வாட்ஸ்அப்பின் குளோன் செயலி பயனாளர்களின் செய்திகளை ரகசியமாக உளவுபார்ப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இணைய பாதுகாப்பு நிறுவனமான இஎஸ்இடி வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில், சென்ற 4 மாதங்களில் ஆண்ட்ராய்டு ஸ்பைவேர்க்கு பின்னால் இருப்பது வாட்ஸ் அப்பின் பிரபலமான ஜிபி வாட்ஸ்அப் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இச்செயலிகள் ஆடியோ மற்றும் வீடியோக்களை உளவுபார்த்து திறம்பட பதிவுசெய்யும் திறன்களைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி அறிக்கையில், கூகுள் பிளேயில் குளோன் செயலி எதுவும் கிடைக்கவில்லை எனவும் இதனால் முறையான வாட்ஸ்அப் உடன் ஒப்பிடும்போது பாதுகாப்பு சோதனைகள் எதுவும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் மற்ற வலைத்தளங்களில் இந்த வெர்ஷன்கள் மால்வேர்களுடன் கிடைக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மேமாதம் முதல் ஆகஸ்ட் வரை மோசி எனப்படும் மிகப் பெரிய இன்டர்நெட் ஆப் திங்ஸ் பாட்நெட்டை உருவாக்கும் போட்களுக்கான ரேங்கிங்கில் சீனாவுக்கு (53 சதவீதம்) அடுத்து இந்தியா (35 சதவீதம்) 2வது இடத்தை பிடித்து இருக்கிறது.
சென்ற 2021-ல் மோசியின் உரிமையாளர் கைது செய்யப்பட்டதில் இருந்து, இந்த மோசி பாட்நெட்டானது தானியங்கு முறையில் இயங்குவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ரிமோட் டெஸ்க் டாப் புரோட்டோகால் தாக்குதல்களில் ரஷ்ய ஐபி முகவரிகள் முக்கிய பொறுப்பாக இருந்தது. ரான்சம்வேர் வாயிலாக அதிகம் குறிவைக்கப்பட்ட நாடு ரஷ்யாவாகும். ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்களில் கிரெடிட்கார்டு விபரங்களுக்கு, வெப் ஸ்கிம்மர் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளது.