கிணற்றுள் தவறி விழுந்த சிறுமியை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சின்னாளம்பாளையத்தில் விவசாயியான மோகன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மதுமிதா(15) என்ற மகள் உள்ளார். இந்த சிறுமி பெருந்துறையில் இருக்கும் தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மதுமிதா வீட்டிற்கு அருகில் இருக்கும் தோட்டத்தில் கிணற்றுக்கு சென்று மின் மோட்டாரை இயக்க முயன்ற போது எதிர்பாராதவிதமாக கால் தவறி 120 அடி ஆழமுடைய கிணற்றுக்குள் தவறி விழுந்தார்.
10 அடி ஆழத்திற்கு தண்ணீர் இருந்த கிணற்றில், காய்ந்து போன வாழை மரங்கள் மிதந்து கொண்டிருந்ததால் சிறுமி அதனை பிடித்து தண்ணீரில் மூழ்காமல் தத்தளித்தபடி அபயகுரல் எழுப்பியுள்ளார். மகளின் சத்தம் கேட்டு ஓடி வந்த மோகன்ராஜ் கிணற்றுக்குள் இறங்க முயற்சி செய்தும் அவரால் முடியவில்லை. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கயிறு கட்டி சிறுமியை பத்திரமாக மீட்டனர். இதனை அடுத்து வலது காலில் காயம் ஏற்பட்டதால் சிறுமி பெருந்துறை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சொல்லப்பட்டுள்ளார்.