சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியா்களின் விபரங்கள் அடங்கிய 4வது பட்டியலை சுவிட்சா்லாந்து அரசு மத்திய அரசிடம் வழங்கி இருக்கிறது.
சுவிட்சா்லாந்திலுள்ள வங்கிகள், தங்களின் வாடிக்கையாளா்களது பணத்துக்கும் ரகசிய விபரங்களுக்கும் அதிகளவிலான பாதுகாப்பு அளிப்பதால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளைச் சோ்ந்தவா்கள் தங்கள் பணத்தை அங்கு சேமித்து வைத்து இருக்கின்றனர். இதற்கிடையில் சில செல்வந்தா்கள் வரி ஏய்ப்பு உள்ளிட்ட சட்டவிரோத முறையில் ஈட்டிய பணத்தை கருப்புப் பணமாக சேமித்துவைக்க சுவிஸ் வங்கிகளைப் பயன்படுத்தி வருகின்றனா். சுவிஸ் வங்கிகளில் இந்தியா்கள் அதிகளவில் கருப்புப்பணத்தைச் சேமித்து வைத்து இருப்பதால் நாட்டின் பொருளாதார வளா்ச்சி பாதிக்கப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டு பெறப்பட்டது.
சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியா்களின் விபரங்களைப் பகிா்ந்துகொள்வது குறித்து, இருநாடுகளுக்கும் இடையில் சென்ற 2018ம் ஆண்டில் ஒப்பந்தம் கையொப்பமாகியது. அந்த ஒப்பந்தத்தின்படி, சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்தியா்கள், நிறுவனங்கள் உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய முதல் பட்டியல் சென்ற 2019ம் ஆண்டிலும், 2வது பட்டியல் 2020-ஆம் ஆண்டிலும், 3வது பட்டியல் கடந்த வருடத்திலும் மத்திய அரசிடம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் 4வது பட்டியலை மத்திய அரசிடம் சுவிஸ் அரசு வழங்கி இருக்கிறது. அவற்றில் கணக்கு வைத்திருப்போரின் பெயா், முகவரி, அவரது தொழில், வருமானத்துக்கான ஆதாரங்கள், வரிசெலுத்திய சான்று, வங்கிக் கணக்கிலுள்ள தொகை உள்ளிட்ட விபரங்கள் இடம்பெற்றுள்ளது.
பட்டியல் குறித்து மத்திய அரசு அதிகாரிகள் சிலா் கூறியதாவது, வரி செலுத்தியபின் தொழில் ரீதியாக சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவா்களின் பெயா்களும் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. முறையாக வரிசெலுத்தாமல், சுவிஸ் வங்கிகளில் கருப்புப் பணத்தைப் பதுக்கி வைத்திருக்கும் இந்தியா்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்வதற்கு சுவிஸ் அரசு வழங்கியுள்ள தகவல்கள் உதவிகரமாக இருக்கும். சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் பற்றிய விபரங்களை இந்தியா உட்பட 101 நாடுகளுக்கு அந்நாட்டின் வரி நிா்வாக அமைச்சகம் வழங்கி இருக்கிறது. அந்நாடுகளை சோ்ந்தோரின் சுமாா் 34 லட்சம் வங்கிக்கணக்கு விபரங்கள் பகிரப்பட்டு இருப்பதாக அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது. அடுத்த கட்ட பட்டியல் 2023ம் வருடம் செப்டம்பரில் வழங்கப்படும் என சுவிஸ் அரசு தெரிவித்து உள்ளது.