ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் கழுதை கறி விரும்பி சாப்பிடுகிறார்கள். இதற்கு அரசு தடை விதித்த போதிலும் சட்ட விரோதமாக கழுதைகளை கடத்தி வந்து கறி விற்பனை செய்து வருகின்றனர். கழுதை கறி மூலம் வேகம், வலிமை மற்றும் சுவாச பிரச்சனைகளை குணப்படுத்த முடியும் என்று நம்புகிறார்கள். அதிலும் ஆண்மை சக்தி அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது. இதனால் கழுதை கறி வெட்டப்படும் இடங்களில் போட்டி போட்டுக் கொண்டு வாங்கி செல்கின்றனர். ஒரு கிலோ கறி ரூ.700 வரை விற்பனை செய்யப்படுகிறது. மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழகம் ஆகிய மாநிலங்களில் இருந்து கழுதைகள் சட்டவிரோதமாக கடத்தப்படுகிறது. இந்நிலையில் ஆந்திரா மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் சட்ட விரோதமாக கழுதை கறிகள் கடத்தப்படுவதாக விலங்கின ஆர்வலர்களுக்கு தகவல் கிடைத்தது.
அவர்கள் அளித்த புகாரின்படி பாபட்லா மாவட்டத்தில் நேற்று 4 இடங்களில் சோதனை மேற்கொண்டனர். அங்கு கழுதைகளை வெட்டி சுகாதாரமற்ற முறையில் கறிகளை விற்பனை செய்து கொண்டிருந்த 11 பேரை கைது செய்தனர். 400 கிலோ கழுதை இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. அதனைப் போல உசிலிப்பேட்டையில் 2 இடங்களிலும், வேடபாலத்தில் ஒரு இடத்தில், சிராலா ஒரு நகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. கைதானவர்கள் மீதும் விலங்குகள் வதை தடுப்பு சட்டம், உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை சட்டம் ஆகிய பல்வேறு பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கழுதைகளை வெட்டி அறுப்பது சட்டத்தை மீறுவதாகும். மேலும் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். உணவு பாதுகாப்பு சட்டப்படி கழுதை இறைச்சி சாப்பிடுவதும் சட்டவிரோதம். எனவே பொதுமக்கள் கழுதை கறிகளை வாங்கி சாப்பிட வேண்டும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.