துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த மாதம் முழுவதும் மார்பக புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை புற்றுநோய் நண்பர்கள் அமைப்பு மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் இதன் ஒரு பகுதியாக துபாய் பல்கலைக்கழகத்தில் நேற்றைய தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை பல்கலைக்கழக தலைவர் டாக்டர் ஈஷா எம் பஸ்தகி தொடங்கி வைத்துள்ளார்.
இதில் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் விதமாக தலைமுடியை தானமாக வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அப்போது துபாயில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் ஒன்றாம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் தமிழகத்தின் அரியலூர் மாவட்டம் வரதராஜன் பேட்டை சேர்ந்த ஆறு வயது மாணவி அனன்யா சேவியர் தனது தலைமுடியை தானமாக வழங்கியுள்ளார். அவரது முடியை பல்கலைக்கழக தலைவர் டாக்டர் இஷா எம் பஸ்தகி கத்திரிக்கோலால் வெட்டியுள்ளார்.
அப்போது பல்கலைக்கழக தலைவர் பேசும்போது அனன்யா சேவியரின் முயற்சி பாராட்டத்தக்கதாகும். மிகவும் இளம் வயதிலேயே தனது முடியை தானமாக வழங்க ஆர்வத்துடன் முன் வந்திருக்கின்றார். இதுபோல மற்றவர்களுக்கு புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவிட முன் வர வேண்டும் என கூறியுள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு அனன்யா தலைமுடியை தானமாக வழங்கியது ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.