ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள செல்லங்குப்பம் கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கிருஷ்ணமூர்த்தியின் தாய் அமிர்தம்மாள், மனைவி கமலா, மகன்கள் தேவராஜ், தேவேந்திரன், மருமகள் ரம்யா மற்றும் ரம்யாவின் 2 கை குழந்தைகள் ஆகியோர் சென்றனர். திடீரென அவர்கள் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதோடு மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர். இதனை பார்த்து போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் கூறியதாவது, கிருஷ்ணமூர்த்தி கரும்பு வெட்டும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அவர்களது வீட்டிற்கு அருகே இருக்கும் பட்டா இடத்தில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்க ஊராட்சி சார்பில் 3 அடி இடம் கேட்டனர். இதனை அடுத்து கிருஷ்ணமூர்த்தியின் குடும்பத்தினர் கொடுத்த 3 அடி இடத்தில் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கிருஷ்ணமூர்த்திக்கு சொந்தமான வீட்டிற்கு அருகே 16 அடி பாதை உள்ளதாகவும், கரும்பு ஏற்றி செல்வதற்கு வசதியாக அந்த இடத்தை தர வேண்டும் எனவும் சிலர் கேட்டனர்.
இதற்கு கிருஷ்ணமூர்த்தி மறுப்பு தெரிவித்ததால் அவர்கள் கிருஷ்ணமூர்த்தியின் குடும்பத்தினரை தாக்கி வீட்டு சுவரையும், மின் கம்பியையும் சேதப்படுத்தி மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் கிருஷ்ணமூர்த்தி குடும்பத்தினர் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. அவர்களை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மேலும் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.