திருமலையில் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் பிரம்மோற்சவ விழா முடிவடைந்துள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். இதனையடுத்து புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் திருப்பதியில் பக்தர்களின் கூட்டத்திற்கு குறைவிருக்காது. அந்த வகையில் கடந்த ஐந்து நாட்களாக திருப்பதியில் அதிகமான கூட்டம் இருந்த நிலையில் இன்று சற்று குறைந்து காணப்படுகின்றது. இந்நிலையில் திருமலையில் சுமார் 32 காத்திருப்பு அறைகளை தாண்டி தரிசன வரிசையில் பக்தர்கள் காத்துக் கொண்டிருந்தனர்.
இவர்கள் இலவச தரிசனத்திற்கு சுமார் 20 மணி நேரமும் கட்டண தரிசனத்திற்கு 6 மணி நேரமும் காத்திருந்து வரிசையில் நின்று சுவாமியை தரிசித்து சென்றுள்ளனர். மேலும் காத்திருப்பு அறைகளில் பக்தர்களுக்கு தேவையான பால், குடிநீர், உணவு உள்ளிட்டவைகளை தேவஸ்தானம் சார்பில் வழங்கப்பட்டது. இதனைதொடர்ந்து தற்போது திருமலையில் மழை பெய்து வருவதால் வரிசையில் நின்ற பக்தர்கள் நனைந்து கொண்டே சாமி தரிசனத்திற்கு சென்றனர். இந்த குளிரினால் குழந்தைகளும் முதியவர்களும் பெரும் அவதியுற்றனர்.