ரஷ்யா மீதான ஐ.நா.சபை வாக்கெடுப்பின் போது காஷ்மீர் குறித்து பாகிஸ்தானின் “அர்த்தமற்ற” கருத்துகளுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்து வருகின்றது.
உக்ரைன் நாட்டில் உள்ள 4 பகுதிகளை ரஷ்யாவுடன் இணைத்ததை கண்டித்து ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட திட்டமிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ரஷ்யாவை கண்டிக்கும் இந்த தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெற்றுள்ளது. இந்நிலையில், இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 143 நாடுகளும் எதிராக 5 நாடுகளும் வாக்களித்துள்ளன. மேலும் இந்தியா உள்பட 35 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்துள்ளன.
இதனைத்தொடர்ந்து ஐ.நா. சபையில் பேசிய இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருசிரா காம்போஜ் கூறியதாவது, “ஜம்மு காஷ்மீரின் முழுப் பகுதியும் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்துமாறு பாகிஸ்தானை நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம், இதனால் எங்கள் குடிமக்கள் தங்கள் வாழ்வுரிமை மற்றும் சுதந்திரத்தை அனுபவிக்க முடியும். வளரும் நாடுகள் (உக்ரைன்) மோதலின் விளைவுகளை எரிபொருள், உணவு மற்றும் உரம் வழங்கல் ஆகியவற்றில் பெரும் பாதிப்பை எதிர்கொள்வதால், உலகளாவிய தெற்கின் குரல் கேட்கப்படுவதும் அவர்களின் நியாயமான கவலைகள் முறையாக கவனிக்கப்படுவதும் முக்கியம்.
மேலும் இன்று வாக்களிக்கப்பட்ட தீர்மானத்தில் இன்னும் சில முக்கிய பிரச்சனைகள் போதுமான அளவில் கவனிக்கப்படவில்லை. வாக்களிக்காமல் இருப்பதற்கான எங்களின் முடிவு எங்களின் நன்கு சிந்திக்கப்பட்ட தேசிய நிலைப்பாட்டுடன் ஒத்துப்போகின்றது. இது யுத்த யுகமாக இருக்க முடியாது என எனது பிரதமர் சந்தேகத்திற்கு இடமின்றி கூறியுள்ளார். இதனை அடுத்து பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரம் மூலம் அமைதியான தீர்வுக்கு பாடுபட வேண்டும் என்ற இந்த உறுதியான தீர்மானத்துடன், இந்தியா விலக முடிவு செய்துள்ளது. உக்ரைனில் சிவிலியன் உள்கட்டமைப்பை குறிவைப்பது மற்றும் பொதுமக்களின் மரணங்கள் உள்ளிட்ட மோதல்கள் அதிகரிப்பதில் இந்தியா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. இதனை தொடர்ந்து மனித உயிர்களை விலையாகக் கொண்டு எந்தத் தீர்வையும் எட்ட முடியாது என்று நாங்கள் தொடர்ந்து வாதிட்டு வருகின்றோம்” என்று அவர் கூறியுள்ளார்.