சென்னையில் 17 வயது மாணவன் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் அவருக்கு டியூஷன் எடுத்து வந்த தனியார் பள்ளி ஆசிரியை கைது செய்யப்பட்டு இருக்கிறார். தற்போது கைதாகியுள்ள பள்ளி ஆசிரியை ஷர்மிளா(23), அந்த மாணவருடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார். இதையடுத்து திடீரென்று மாணவனிடம் பேசுவதை அவர் நிறுத்தினார். அதன்பின் ஆசிரியருக்கு வேறொருவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததால், மனமுடைந்த பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்டிருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. எனினும் தற்கொலை செய்து ஒரு மாதத்திற்கு பிறகு, இவ்வழக்கில் தற்போதே ஆசிரியை கைது செய்யப்பட்டிருப்பதற்குக் காரணம் என்ன என்பது குறித்து காவல்துறை விளக்கம் அளிக்கவில்லை.
தற்கொலை செய்துகொண்ட மாணவன் சென்னையில் வசித்து வந்துள்ளார். இவர் 12ம் வகுப்பு முடித்து விட்டு, ஆகஸ்ட் 30ம் தேதி கலைக் கல்லூரியில் நடைபெற்ற கலந்தாய்வில் பங்கேற்று கல்லூரிப் படிப்பை தேர்வு செய்துவிட்டு வீட்டுக்குத் திரும்பி இருக்கிறார். பின் அன்று மாலை மாணவன் தன் அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அம்பத்தூர் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையில் தன் மகன் தற்கொலைக்குக் காரணமானவர்களை தண்டிக்கவேண்டும் என அவரது தாயார் போலீஸ் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
பின் போலீசார் மாணவனின் செல்லிடப்பேசி மூலம் விசாரணையினை துவங்கினர். இந்நிலையில்தான் செல்லிடப்பேசி வாயிலாக பள்ளி ஆசிரியர் ஒருவருடன் அவர் நெருங்கிப் பழகி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் மாணவரும், ஆசிரியையும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் அதில் இருந்தது. அதனை தொடர்ந்து பள்ளியில் மாணவரின் நண்பர்களிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில், சம்பந்தப்பட்ட ஆசிரியை ஷர்மிளா, அதே பள்ளியில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுத்து வந்திருக்கிறார்.
இதற்கிடையில் ஆசிரியர் வீட்டில் டியூஷன் நடத்தி வரும் போது அந்த மாணவனுடன் பழக்கம் ஏற்பட்டது தெரியவந்தது. இது பற்றி காவல்துறையினர் கூறியதாவது, 2 மாதங்களுக்கு முன் அந்த ஆசிரியைக்கு நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது. அதன்பின் அந்த ஆசிரியை மாணவருடன் பேசுவதை நிறுத்தி விட்டார். ஆனால் இந்த உறவை உண்மை என நம்பியிருந்த மாணவரால் இதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதனால் மன அழுத்தத்தில் மாணவன் தற்கொலை செய்துகொண்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆசிரியர் ஷர்மிளா மீது குழந்தையை தற்கொலைக்குத் தூண்டுதல், பாலியல் ரீதியான துன்புறுத்துவது உள்ளிட்ட வழக்குகள் பதிவுப்செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.