வீடு கட்ட எதிர்ப்பு தெரிவித்ததால் பழங்குடியின மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அப்பேடு, நாச்சாவரம், தத்தனூர், கொங்காவரம், ஈச்சத்தாங்கல் ஆகிய கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்கள் 75 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதில் கொங்கவரம் கிராமத்தில் மட்டும் 50 பேருக்கு வீடு கட்டுவதற்கு இரண்டு சென்ட் வீதம் வீட்டு மனை ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான அளவீடு செய்யும் பணி வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்,மற்றும் நில அளவையர் சென்று 50 பேருக்கும் தலா இரண்டு சென்ட் வீதம் அளந்து கல்லை நட்டுள்ளனர்.
அந்த சமயத்தில் அப்பகுதியைச் சேர்ந்த சில மக்கள் இந்த இடத்தில் பழங்குடியினர் வீடு கட்டக் கூடாது எனக்கூறி தடுத்து நிறுத்தி உள்ளனர். இதில் ஆத்திரமடைந்த பழங்குடியின மக்கள் 75 பேருக்கும் மேற்பட்டோர் தாலுகா அலுவலகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் கொங்காவரம் கிராமத்தை சேர்ந்த சில மக்கள் பழங்குடியினருக்கு வீடு கட்ட எதிர்ப்பு தெரிவித்து தாசில்தாரிடம் மனு கொடுத்துள்ளனர்.
அவர்களிடம் பேசிய தாசில்தார் கோவிந்தராஜ் “பழங்குடியின மக்களுக்கு வீட்டுமனை பட்டாவும் அதில் வீடு கட்ட நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது. இதில் நீங்கள் ஏதேனும் தகராறு செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என கொங்காவரம் கிராமத்து மக்களை எச்சரித்துள்ளார். இதனை அடுத்து பழங்குடியின மக்களிடம் தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதில் “உங்களுக்கு அந்த இடத்தில் வீடு கட்டித் தருவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் விரைவில் செய்யப்படும்” என உறுதியளித்துள்ளார். அதன் பின் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.