டெல்லியில் மரங்களை பிடுங்கி மாற்றுயிடங்களில் நட்டபின், அதன் நிலை என்ன என்பது பற்றிய கணக்கெடுப்பு டேராடூனை மையமாக வைத்து இயங்கும் வன ஆராய்ச்சி நிறுவனம் துவங்கியுள்ளது. இக்கணக்கெடுப்பு அனைத்து இடமாற்றப்பட்ட மரங்களின் உயிர் வாழ்வு விகிதம் பற்றிய விபரங்களை சேகரிக்கும். முதலாவதாக டெல்லி தெற்கு கோட்டத்தில் நடவுசெய்யப்பட்ட மரங்கள் சென்ற ஒருவார காலமாக கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. டெல்லி அரசின் மரம் மாற்று கொள்கையின் தாக்கத்தை அறிவதற்கும் இந்த கணக்கெடுப்பு உதவும். டெல்லி அரசின் மரம்மாற்று கொள்கையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட ஏஜென்சிகள் தங்களது வளர்ச்சிப் பணிகளால் பாதிக்கப்பட்ட மரங்களில் குறைந்தபட்சம் 80 சதவீதத்தையாவது இடமாற்றம் செய்யவேண்டும்.
அதேபோன்று மே மாதம் டெல்லி ஐகோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில், டெல்லியில் சென்ற 3 வருடங்களில், வளர்ச்சிப் பணிகளுக்காக ஓரிடத்தில் இருந்து பிடுங்கி மாற்று இடங்களில் நடவுசெய்யப்பட்ட 16,461 மரங்களில் 3ல் ஒரு பங்கு (33.33 சதவீதம்) மட்டுமே உயிர்பிழைத்துள்ளது. கடந்த 2019-20ல் டெல்லி நகரத்தில் நடவுசெய்யப்பட்ட 4,162 மரங்களில் 1,521 மட்டுமே உயிர்பிழைத்துள்ளது என வனத்துறையினர் தெரிவித்தனர். 2020-21ல் மாற்றுயிடங்களில் நடவுசெய்யப்பட்ட 7,003 மரங்களில், 2,001 மரங்கள் (28.57 சதவீதம்) உயிர்பிழைத்தது. 2021-22ல் நடவுசெய்யப்பட்ட 5,296 மரங்களில் 1,965 மரங்கள்(37.10 சதவீதம்) மட்டுமே உயிருடன் இருக்கிறது.