2 வயது ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த முகுல் காசி(32) என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பஜூலா காத்தூன் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 வயதுடைய காசி என்ற ஆண் குழந்தை மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 8- ஆம் தேதி குடும்பத்தினர் 5 பேரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு 12 மணிக்கு காசி திடீரென அலறி சத்தம் போட்டதால் முகுல் காசி மின் விளக்கை போட்டு பார்த்தார்.
அப்போது சிறுவனுக்கு அருகே கட்டுவிரியன் பாம்பு ஊர்ந்து சென்றதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தந்தை உடனடியாக தனது குழந்தையை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு சிகிச்சை பலனின்றி இரண்டு வயது குழந்தையான காசி பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.