வடக்கு டெல்லியில் மீண்டும் வன்முறை ஏற்பட்டுள்ளதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஜாஃபராபாத், மவ்ஜ்புர், பஜன்புரா, கோகுல்புரி ஆகிய பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. அதே போல குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும் அங்கு சிலர் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் முற்றி ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக கற்களை வீசித் தாக்கிக் கொண்டனர்.
இதனால் அங்கு வன்முறை ஏற்பட்டதையடுத்து வாகனங்கள், கடைகள் , பெட்ரோல் நிலையம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டது. இந்த வன்முறை காரணமாக ஜாஃபராபாத், மவ்ஜ்புர், பஜன்புரா பகுதிகள் போர்க்களமாக மாறின. கோகுல்புரி பகுதியில் கல்வீச்சு சம்பவத்தில் படுகாயமடைந்த தலைமைக்காவலர் ரத்தன் லால் என்பவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
மேலும் இந்த வன்முறையில் பொதுமக்களில் நான்கு பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 160க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.தலைமைக்காவலர் ஒருவர் உட்பட பொதுமக்களில் 6 பேர் என மொத்தம் 7 பேர் உயிரிழந்துள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே சட்டம் ஒழுங்கு பிரச்சனையை பராமரிப்பது , நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருது குறித்த ஆலோசனை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்றது. இதில் டெல்லி மாநில முதல்வர் , ஆளுநர் , காவல் ஆணைய தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இன்று காலை மீண்டும் வன்முறை ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை உருவானதால் வடகிழக்கு டெல்லியின் மவுஜ்பூர் , பிரம்மபுரி , கரவால் நகர் , சந்த்பூர் ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவை டெல்லி காவல்துறை பிறப்பித்துள்ளது.