மின்னல் தாக்கி தொழிலாளி உடல் கருகி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ராமச்சந்திரம் கிராமத்தில் கல் உடைக்கும் தொழிலாளியான சிவப்பா(46) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மஞ்சுளா(32) என்ற மனைவி உள்ளார் இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் சிவப்பா தனது குடும்பத்தினருடன் ஓட்டு வீட்டில் படுத்து தூங்கியுள்ளார். அந்த பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
இந்நிலையில் தூங்கிக் கொண்டிருந்த சிவப்பா, அவரது மனைவி மீது பயங்கர சத்தத்துடன் மின்னல் தாக்கியதால் சிவப்பா சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்துவிட்டார். அவர்களது சத்தம் கேட்டு விரைந்து வந்த அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த மஞ்சுளாவை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.