தமிழகத்தில் அரசு பணியில் சேர வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மக்கள் ஒவ்வொரு வருடமும் பதிவு செய்து வருகிறார்கள் . கல்வி தகுதிகளின் அடிப்படையில் அவ்வபோது அப்டேட் செய்து வருகிறார்கள். முன்பு வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் அரசு பணி வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அரசு பணிகள் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருவதால் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த லட்சக்கணக்கானோர் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்து வருடங்களுக்கு மேலாகியும் வேலை கிடைக்காமல் இருக்கும் படித்த இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அரசு கொண்டுவந்துள்ளது.இந்த உதவி தொகை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகை ஆக வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஒரு வருடம் முடிவடைந்து இருந்தாலே உதவித்தொகை வழங்கப்படும்.
அதன்படி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 300 ரூபாய், தோல்வியடைந்தவர்களுக்கு 200, 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 400 ரூபாய் மற்றும் பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரிகளுக்கு 600 ரூபாய் மாதம் தோறும் வழங்கப்படும் என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் ஒவ்வொரு பிரிவினருக்கும் ஏற்ற வகையில் உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த திட்டத்தின் கீழ் உதவி தொகை பெற தகுதியுடையவர்கள் ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.