சென்னையில் உள்ள டி.கே சாலையில் கடந்த வியாழக்கிழமை பிரபலமான அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில் சர்வதேச பார்வை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது அகர்வால் மருத்துவமனையில் படிக்கும் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
அதன்பிறகு மருத்துவமனையின் முதுநிலை மருத்துவ நிபுணர் டாக்டர் மஞ்சுளா ஜெயக்குமார் பேசினார். அவர் கூறியதாவது, இன்றைய காலை கட்டத்தில் வாழ்க்கை முறை மாற்றத்தினால் கண் பார்வை குறைபாடுகள் அதிகரித்துள்ளது. அடுத்த 25 வருடத்தில் 50% பேருக்கு பார்வைத் திறன் குறைபாடு ஏற்படலாம். இந்த பாதிப்புகளில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் கணினி மற்றும் செல்போன் பயன்படுத்தும் போது 20 20 20 என்ற விதிமுறையை பின்பற்ற வேண்டும்.
அதாவது செல்போன் மற்றும் கணினி போன்ற டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்தும் போது 20 நிமிடங்களுக்கு ஒரு முறை அதிலிருந்து தங்களுடைய பார்வையை விலக்கி 20 அடி தொலைவில் உள்ள ஒரு இடத்தை 20 வினாடிகள் பார்க்க வேண்டும். மேலும் இப்படி பார்ப்பதன் மூலம் டிஜிட்டல் திரையினால் ஏற்படும் கண் பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம் என்றார்.