உயர் நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து இறந்தவர் பழங்குடி இனத்தவர் அல்ல என தமிழக அரசு தெரிவித்துள்ளது..
தனது மகனுக்கு பழங்குடியினர் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தும், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் அதனை வழங்காமல் தன்னை அலைக்கழித்ததாக குற்றஞ்சாட்டி கண்டனம் தெரிவித்து சென்னை உயர் மன்ற வளாகத்தில் உள்ள இலவச சட்ட உதவி மையம் அருகே காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் அண்மையில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியன் பரிந்துரைத்தார். அதன்படி இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி. ராஜா, நீதிபதி கிருஷ்ணகுமார் தலைமையில் இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கு இன்றைய தினம் பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் ஆஜர் ஆகி, வேல்முருகன் அலைக்கழிக்கப்படவில்லை, பட்டியல் இனத்தைச் சேர்ந்த இவர் பழங்குடியினர் சான்று கோரி விண்ணப்பித்ததால் நிராகரிக்கப்பட்டது.. விண்ணப்பித்த ஆறு நாட்களில் விண்ணப்பம்பரிசீலிக்கப்பட்டு, உடனடியாக அவருக்கும் தெரிவிக்கப்பட்டது.
இதில் அலைக்கழிப்பு எதுவும் இல்லை என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிமன்றம் இதுகுறித்து விசாரணை நடத்தி விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட வருவாய் அதிகாரியை நியமித்து இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.