கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள விகேகே மேனன் சாலையில் பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் அமைந்துள்ளது. இந்த கட்சி அலுவலகத்தின் மீது கடந்த மாதம் 22-ஆம் தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக காட்டூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையின் போது கவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்த சதாம் உசேன் மற்றும் அகமது சிகாபுதீன் ஆகியோர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இவர்கள் 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்த நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஏற்கனவே அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பின்படி கோவை மத்திய சிறையில் இருக்கும் சதாம் உசேன் மற்றும் அகமது சிகாபுதீன் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இன்று நடவடிக்கை எடுக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.