கேரளா பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள எலந்தூர் கிராமத்தில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கேரள மாநிலத்தை உலுக்கிய இந்த கொடூர கொலைகள் பற்றிய விபரங்கள், அக்டோபர் 11 ஆம் தேதியன்று வெளிவந்தது. இதையடுத்து பகவல்சிங் (68) என்ற மசாஜ் சிகிச்சை நிபுணர், அவரது மனைவி லைலா(59) மற்றும் பிரதான குற்றவாளி முகமதுஷபி (52) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையில் கைதான பகவல்சிங் – லைலா தம்பதி சிபிஎம் (மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட்) கட்சித்தொண்டர்கள் என காங்கிரசும், பாஜகவும் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியை தாக்கியது.
அதாவது, கொலையாளிகளில் ஒருவர் சிபிஎம் தொண்டர் என மாநில பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன் குற்றம் சாட்டி இருந்தார். அதுமட்டுமின்றி குற்றத்தில் தீவிர மதக் குழுக்களின் தலையீடும் இருந்தது என அவர் கூறினார். இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுகளை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் மறுத்துள்ளது. அதாவது, சிபிஎம் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க பா.ஜ.க மற்றும் காங்கிரஸால் பரப்பப்பட்ட பொய் பிரச்சாரம் இது என தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சிபிஎம் மாவட்டச் செயலாளர் கே.பி.உதயபானு கூறியதாவது, இரட்டை கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தம்பதியினர், கட்சி உறுப்பினர்கள் அல்ல. குற்றம்சாட்டப்பட்ட தம்பதியினருக்கு கட்சியிலோ (அல்லது) அதன் தொடர்புடைய அமைப்புகளிலோ எந்தப் பதவியும் இல்லை. அத்துடன் குற்றம்சாட்டப்பட்ட தம்பதிகள், சிபிஐ(எம்)-ன் தீவிர உறுப்பினர்கள் என்ற குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றவை ஆகும். சிபிஎம் கட்சி, பகுத்தறிவற்ற நம்பிக்கைகள் மற்றும் மூட நம்பிக்கைகளுக்கு எதிராகப் போராடுவதில் முன்னணியில் இருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.