டெல்லியில் ஏற்படும் வன்முறையை கட்டுப்படுத்த கண்டதும் சுட உத்தரவு என்ற தகவல் வெளியாகியுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் நடைபெற்ற போராட்டத்திற்கு எதிராகவும் , குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும் நடைபெற்ற போராட்டத்தில் இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் முற்றி வன்முறையாக மாறியது. மாறி , மாறி கற்களை கொண்டு தாக்கிக் கொண்ட கும்பல்கள் ஒரு கட்டத்தில் தீ வைத்து கட்டுக்கடங்காத போர்க்களமாக மாறின. கோகுல்புரி பகுதியில் கல்வீச்சு சம்பவத்தில் தலைமைக்காவலர் ரத்தன் லால் என்பவர் உயிரிழந்தார்.
இதனிடையே வடகிழக்கு டெல்லி பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். வன்முறை கட்டுக்கடங்காமல் எல்லை மீறி சென்றதால் அங்குள்ள மவுஜ்பூர் , பிரம்மபுரி , கரவால் நகர் , சந்த்பூர் ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவை டெல்லி காவல்துறை பிறப்பித்துள்ளது. பெரும் பதற்றமான சூழலில் முதல்வர் , ஆளுநரருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். இதனால் தலைநகர் டெல்லி பதற்றமான சூழல் நிலவி வருகின்றது.
கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்த வன்முறை சம்பவத்தில் செய்தி சேகரிக்க சென்றவர்களும் தாக்கப்பட்டனர். இதுவரை வட கிழக்கு டெல்லியில் ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. வன்முறையில் காயமடைந்த 200க்கும் அதிகமானோர் ஜிடிபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த வன்முறை தொடர்பாக 11 FIR பதிவு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்திருந்தனர்.
மேலும் வன்முறையை கட்டுப்படுத்த, கண்காணிக்க சிறப்பு காவல் ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி ஸ்ரீவசந்தா நியமிக்கப்பட்டார். இதையடுத்து வடகிழக்கு டெல்லியின் யமுனா விஹார் உள்ளிட்ட சில பகுதியில் வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவு என்ற செய்தி வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியடை வைத்தது.
இதையடுத்து இப்படி எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை , இது வெறும் வதந்தி என்று டெல்லி போலீசார் விளக்கியதுடன் பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என ஒலிப்பெருக்கியில் அறிவுறுத்தி வருகின்றனர். கண்டதும் சுட உத்தரவு என்ற பரவிய வதந்தி செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
https://twitter.com/ANI/status/1232328427044130816