அமெரிக்காவில் வாடகை தாய் மூலம் மூன்று அழகிய சிறுத்தைக்குட்டிகள் பிறந்துள்ளன.
உலகில் குழந்தை பாக்கியம் இல்லாமல் எத்தனையோ தம்பதியினர் இருக்கின்றனர். ஆனால் அந்த தம்பதிகள் சோதனைகுழாய் மற்றும் வாடகை தாய் மூலமும் குழந்தை கிடைக்க பெறுகின்றனர். அந்த அளவிற்கு இன்றைய அறிவியல் தொழில்நுட்பம் அவர்களுக்கு மிகப்பெரும் உதவியாக இருந்து வருகின்றது.
அந்தவகையில் அமெரிக்காவில் இது போன்று ஒரு மகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. ஆம் வாடகை தாய் மூலம் 3 சிறுத்தை குட்டிகள் பிறந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டின் ஒஹோயோ மாகாணத்தில் இருக்கும் கொலம்பஸ் உயிரியல் பூங்காவில் கிபிபி (Kibibi) எனும் 6 வயதான சிறுத்தை நீண்டகாலமாக தாய்மை அடையாமலேயே இருந்துள்ளது.
இதையடுத்து கொலம்பஸ் உயிரியல் பூங்கா நிர்வாகிகள் மற்றும் ஸ்மித்சோனியன் உயிரியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்களும் சேர்ந்து கிபிபி சிறுத்தையினுடைய சினை முட்டைகளை எடுத்து இஸ்ஸி எனும் மற்றொரு சிறுத்தைக்கு கடந்த நவம்பர் மாதம் செலுத்தி உள்ளனர். இதனால் இஸ்ஸி அழகிய 3 சிறுத்தை குட்டிகளை ஈன்றுள்ளது.
இதனால் ஒரு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. ஆம், உலகிலேயே வாடைகைத்தாய் மூலமாக சிறுத்தை கருத்தரித்தது இதுவே முதல்முறை. அப்படியென்றால் இது சாதனை தானே. மொத்தம் மூன்று முறை இந்த சோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 2 முறை தோல்வியடைந்துள்ளது. இறுதியாக மூன்றாவது முறையாக சோதனை வெற்றி பெற்றுள்ளது.
தற்போது சிறுத்தைகளின் எண்ணிக்கை அழிந்து கொண்டே வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் சிறுத்தைகளின் எண்ணிக்கை கனிசமாக குறைந்து வருகின்றது. இந்த சூழலில் இந்த சோதனை மூலம் அதற்கு தீர்வு காணலாம் என விஞ்ஞானிகள் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர். சிறுத்தைகளின் சராசரி கருத்தரிக்கும் காலம் 90 நாட்கள் முதல் 100 நாட்கள் என்பது குறிப்பிடதக்கது.