உத்திரபிரதேசம் அலிகாரில் ஒரு கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில், 4 பேர் காயமடைந்தனர். இன்று அதிகாலையில் இந்த விபத்து நடைபெற்றது. இதுகுறித்த தகவலறிந்ததும் தீயணைப்புபடையினர் அங்கு சென்றனர். இதையடுத்து அங்கு மீட்புபணி நடைபெற்று வருகிறது என்றும் இதுவரையிலும் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் விபத்தில் காயமடைந்தவர்கள் உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட கலெக்டர் இந்திரா விக்ரம்சிங் கூறியதாவது, தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.
இடிந்து விழுந்த மேற்கூரையானது பலவீனமான கட்டிடத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அக்கட்டிடத்தின் உள்ளே ஒரு குடோன் இருந்தது. ஆனால் அங்கு எந்த குடும்பமும் வசிக்கவில்லை. சம்பவம் நடந்தபோது 4 பேர் சில பொருட்களை எடுத்து செல்ல குடோன் உள்ளே சென்றனர். இந்நிலையில் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதனால் அவர்கள் 4 பேரும் காயமடைந்தனர். உடனடியாக தகவலறிந்து மீட்புப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டது. அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இப்போது உடல்நிலை சீராக இருக்கிறது. 4 புல்டோசர்கள், 6 ஆம்புலன்ஸ்கள், 1 மருத்துவர் குழு, போலீஸ் மற்றும் தீயணைப்பு குழுக்கள் சம்பவ இடத்தில் இருக்கின்றன என கூறினார்.