சென்னையில் உள்ள ராயப்பேட்டையில் அதிமுக கட்சியின் எம்எல்ஏக்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்களான திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி வேலுமணி, தமிழ் மகன் உசேன், தங்கமணி, சி.வி சண்முகம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் போது கட்சியின் 51-வது பொன்விழாவை எப்படி நடத்துவது என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதோடு சட்டசபை கூட்டத்தின் போது அதிமுக எம்எல்ஏக்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அதன் பிறகு வருகிற 15-ஆம் தேதி சட்டசபை கூட்டத்தொடரின் போது அம்மா ஜெயலலிதா மரணம் குறித்த அறிக்கை திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
இந்த அறிக்கையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாதகமாக ஏதாவது இருந்தால் அதை எப்படி சமாளிப்பது என்பது குறித்து விவாதிக்கப்பட்டதோடு, எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை ஆர்பி உதயகுமாருக்கு கொடுத்தது குறித்தும் விவாதித்தனர். கடிதம் கொடுத்து 2 மாதங்கள் ஆகியும் சபாநாயகர் எந்த ஒரு முடிவும் எடுக்காமல் இருப்பதால், மீண்டும் ஓபிஎஸ் இருக்கையை மாற்றி அமைக்க வலியுறுத்தி சபாநாயகருக்கு கடிதம் எழுதிக் கொடுக்கலாமா என்று மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி ஆலோசித்தார்.
இதைத்தொடர்ந்து சொத்து வரி மற்றும் மின்கட்டண வரையும் உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிச்சாமி உட்பட அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் கூட்டத்தை புறக்கணிக்கவும் முடிவு செய்துள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் கூட்டத்தை புறக்கணிக்கும் போது ஓபிஎஸ் தரப்பு மற்றும் கூட்டத்தில் கலந்து கொண்டால் கட்சியின் கொறடா விதிமுறைகளை மீறியதாக கூறி ஓபிஎஸ் தரப்பு எம்எல்ஏக்களின் பதவியை பறிப்பதற்கும் இபிஎஸ் தரப்பு திட்டமிட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக சபாநாயகருக்கு கடிதம் எழுதிக் கொடுக்கவும் இபிஎஸ் முடிவு செய்துள்ளதாக கூறப்பட்ட நிலையில் ஓபிஎஸ் கடும் டென்ஷனில் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.