பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் பரோட்டாவிற்கு விதிக்கப்படும் 18 % சரக்கு-சேவைவரி (ஜிஎஸ்டி) செல்லும் என்று குஜராத் மேல் முறையீட்டு ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோதுமை மற்றும் மைதாவால் தயாரிக்கப்பட்டு பதப்படுத்தி விற்கப்படும் சப்பாத்தி, ரொட்டிகளுக்கு 5 % ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. அத்துடன் அதே மாவால் செய்யப்பட்டு பதப்படுத்தி விற்கப்படும் பரோட்டாவுக்கு (பராத்தா) 18 % ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இதனால் இதற்கு எதிராக குஜராத் மாநிலத்தின் அகமதாபாதைச் சோ்ந்த வாடிலால் நிறுவனம் தீா்பாயத்தை அணுகியது. அதனை விசாரித்த தீா்பாயம், பதப்படுத்தி விற்கப்படும் பரோட்டா, சப்பாத்தியைக் காட்டிலும் வேறுபட்டது என்பதால் அதற்கு 18 % ஜிஎஸ்டி விதிக்கப்படுவது சரியே என சென்ற வருடம் ஜூன் மாதத்தில் தீா்ப்பு வழங்கியது. அதற்கு எதிராக மேல்முறையீட்டு ஆணையத்தில் அந்நிறுவனமானது முறையிட்டது. அதன்மீதான உத்தரவு சமீபத்தில் பிறப்பிக்கப்பட்டது.
அவற்றில், பதப்படுத்தி விற்கப்படும் ரொட்டியையும் சப்பாத்தியையும் அப்படியே உண்ணலாம். எனினும் பதப்படுத்தி விற்கப்படும் பரோட்டாவை மேலும் சமைத்து மட்டுமே உண்ணமுடியும். மாவும், தண்ணீரும் மட்டுமே சோ்த்து சப்பாத்தி, ரொட்டி போன்றவை தயாரிக்கப்படுகிறது. அதே சமயத்தில் பரோட்டாவானது மாவுடன் வெவ்வேறு வகைகளுக்கு ஏற்ப உருளைக்கிழங்கு, உப்பு, எண்ணெய், பருப்புகள், காலிபிளவா், கறிவேப்பிலை உள்ளிட்டவற்றைச் சோ்த்து தயாரிக்கப்படுகிறது. ஆகையால் பதப்படுத்திய பரோட்டாவுக்கும் 5 % ஜிஎஸ்டி கோரமுடியாது. வாடிலால் நிறுவனம் தயாரித்து விற்பனை செய்யக்கூடிய ரொட்டியில் மாவு மட்டுமே இருக்கிறது. ஆனால் அந்நிறுவனத்தால் விற்கப்படும் பரோட்டாவில் அதன் வகைக்கு ஏற்றவாறு 36 -62 % மாவு மட்டுமே இருக்கிறது. ஆகவே பதப்படுத்தப்பட்ட பரோட்டாவுக்கு 18 % ஜிஎஸ்டி விதிப்பது சரியானதே என குறிப்பிடப்பட்டுள்ளது.